வெள்ளி, 7 மார்ச், 2014

பெரிய புராணம்

A07114 - பெரிய புராணம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இப்பாடம் பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய
சிறப்பிடத்தையும் தனித்தன்மையையும் விரிவாக விளக்குகிறது.
இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும்
சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.

பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை
இப்பாடத்தில் கற்கலாம். தொகையடியார், தனியடியார்
ஆகியோரின் அறிமுகமும் இப்பாடத்தில் கிடைக்கிறது.

சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில் இடம்
பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக் கருவூலமாகத்
திகழ்வதையும்     சமூக     நோக்குடைய     காப்பியமாக
விளங்குவதையும் இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.

சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார்,
திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப்
பெண் தொண்டர்களையும் இப்பாடம் அறிமுகம் செய்கிறது.

4.4. காப்பிய உள்ளீடு 

பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள தனி அடியவர்களுள்
சிலர் சைவ சமயத்திற்கு அருந்தொண்டுகள் இயற்றியதோடு,
தாமே சைவ சமயம் குறித்துத் தனிப்பாடல்களையும்,
பதிகங்களையும், சிற்றிலக்கியங்களையும் படைத்தளித்துள்ளனர்.
கழறிற்றறிவார் அறிவார் என்ற பெயர் கொண்ட சேரமான்
பெருமாள் நாயனார், காரைக்கால் அம்மையார் ஆகியோர்
இயற்றிய நூல்கள் 11 ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
திருஞானசம்பந்தர்,     திருநாவுக்கரசர்     அருளிய
பதிகப்பாமாலைகள் குறித்து முன்னரே விளக்கப்பட்டுள்ளது.
திருமூலர் திருமந்திரமாலை ஆக்கி அளித்துள்ளார், தம்
காலத்துக்கு முற்பட்ட இந்நூல்கள் யாவற்றையும் நன்கு
ஆராய்ந்து அறிந்தே சேக்கிழார் பெரியபுராணம் பாடியுள்ளார்
என்பது நன்கு தெளிவாகிறது. 

4.4.1 சைவ சமயக் கோட்பாடுகள்

சைவ சமயம் தொடர்பான பல உண்மைகள் குறித்துப் பெரிய
புராணம் விரிவாக விளக்கங்களைத் தருகிறது. சைவ சமயத்தில்
சிவலிங்க வழிபாடு தொன்மையானது. சிவலிங்கத் திருமேனியின்
உண்மை குறித்துச் சேக்கிழார்

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
(பெரியபுராணம் 3648)

என்று பாடியுள்ளார். சிவலிங்கம் என்பது உருவமும் அன்று,
உருவம் அற்றதும் அன்று; அருவமும் உருவமும் கலந்த ஒரு
வழிபாட்டுச் சின்னம் என்று சேக்கிழார் விளக்கம் தருகிறார்.
சைவத்தில் இறைவனை வீழ்ந்து வணங்கும் முறைகள் இரண்டு
உண்டு. அவை 1. பஞ்சாங்க நமஸ்காரம் 2. அட்டாங்க
நமஸ்காரம். இதில் பஞ்சாங்க நமஸ்காரம என்பது.
மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கி
(270)

என்றும் , அட்டாங்க நமஸ்காரம் என்பது,

‘அங்கம் மாநிலத்து எட்டுற வணங்கி' (2856) என்றும்
சேக்கிழாரால் விளக்கப்பட்டுள்ளன.

4.4.2 சிவபெருமான் அருள் திறம்

சைவ சமயக் காப்பியம் என்பதற்கு ஏற்பச் சிவபெருமானின்
அடையாளங்களையும்,     அருட் செயல்களையும், வீர
நிகழ்வுகளையும் சேக்கிழார் தம் நூலுள் விரிவாகப் பதிவு
செய்துள்ளார்.
அடியார் இடுக்கண் தரியாதார்
(3483)

எவ்வுயிர்க்கும் தாயானான்
(2385)

அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
(4163)

தொல் உலகம் முழுவதும் அளித்து
அழித்து ஆக்கும் முதல்வர்
(3444)

முன்னாகி எப்பொருட்கும் முடிவாகி நின்றான்
(1421)

முந்தை மறை ஆயிரம் மொழிந்த திருவாயான்
(179)

என வரும் பெரிய புராணத் தொடர்கள் குறிப்பிடத்தக்க
சிறப்புடையன.

(இடுக்கண் - துன்பம்)
4.6 காப்பிய எழில் - உவமை அழகு 

ஒரு பெருங்காப்பியத்திற்கு கற்பனை, வருணனை, உவமை
முதலிய அணிகள் மேலும் அழகு சேர்ப்பன. பக்திக் காப்பியம்
என்பதால் சேக்கிழார் உவமைகளில் எல்லாம் பக்தி மணம்
கமழக்     காண்கிறோம்.     வஞ்சகத்தை     உள்ளத்தில்
வைத்துக்கொண்டு, பொய் வேடம் தரித்து வந்தவனை,


மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கருப்பு வைத்து
(473)

வந்ததாகப் பாடுகிறார். இறைவனைக் கண்ட கண்ணப்பர்
அவரை விட்டு நீங்காத தன்மையை
வங்கினைப் பற்றிப் போதா வல்
உடும்பு என்ன நீங்கான்
(765)
என உடும்பின் தன்மையோடு ஒப்புமை காட்டுகிறார்.
இவ்வாறான உலகில் கலந்த உவமைகள் பல இந்நூலுள் இடம்
பெற்றுள்ளன.

இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
4.5 வரலாற்றுக் காப்பியம்

தமிழ் மொழியில் அமைந்த பிற
புராணங்கள் பலவும் வரலாற்று நோக்கில்
அமைந்தன     அன்று;     சேக்கிழார்
வரலாற்றுத் தரவுகளை நாடு முழுதும்
சென்று நேரில் கண்டு, திரட்டி
முறைப்படுத்திக் கொண்டு, இந்நூலை ஒரு

பொன் விமானம்
வரலாற்றுப் பெருங்காப்பியமாகவே படைத்துள்ளார்.
இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், செவிவழிச்
செய்திகள் யாவும் அவரால் உற்று நோக்கி அறியப்பட்டுள்ளன.
நன்கு அறிந்து தெளிந்த உண்மைகளை மட்டுமே இவர் பதிவு
செய்கிறார். கற்பனைப் பதிவுகளில் இவருக்கு நாட்டம்
இருந்திருக்கவில்லை. பூகோள அறிவும், காலக்கணக்குகளும், நில
இயல்புகளும் இயற்கை அமைப்புகளும் மிகத் துல்லியமாக
இந்நூலுள்     பதிவு     செய்யப்பட்டுள்ளன.     எனவே,
பெரியபுராணத்தை ஒரு வரலாற்றுக் காப்பியமாகக் கொள்ள
முடிகிறது.
வரலாற்றுக் காப்பியம் என்பதற்கு ஏற்பச் சேக்கிழார் இந்நூலுள்
பல வரலாற்றுச் செய்திகளை உள்ளவாறு பதிவு செய்துள்ளார்.

1. ஆதித்த சோழன் தில்லை அம்பலத்திற்குப் பொன்
வேய்ந்தமை.
2. இமயமலையில் சோழன் புலி இலச்சினை பொறித்தமை.
3. ஒரு காலத்தில் பெண்ணை ஆறு துறையூரின் தெற்கில்
ஓடியது.
4. காஞ்சிபுரத்தைக் கரிகால் பெருவளத்தான் புதுக்கியது.
5. அகத்தியர் காவிரியை வரவழைத்தது.
6. இலக்குமி திருவாரூரில் வழிபட்டது,
7. உபமன்யு முனிவர் கண்ணனுக்குச் சிவ தீட்சை செய்வித்தது
8. உமை அம்மை காஞ்சிபுரத்தில் சிவ பூஜை செய்தது
9. உமையம்மை காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும்
வளர்த்தது.
10. சிவபூஜை செய்து பரசுராமன் ‘பரசு’ என்ற ஆயுதம் பெற்றது.

இவ்வாறாக     வரலாற்றுப் பதிவுகள் மேலும் பல
பெரியபுராணத்துள் இடம் பெற்றுள்ளன.
பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்கு உரிய
சிறப்பிடத்தையும், அதன் தனித்தன்மையையும் உள்ளவாறு
இனம் காணலாம்.
4.7 பெரியபுராணம் - சமூகநோக்கு

எந்த ஒரு காப்பியமும் சமூகப் பயன்பாடு கொண்டதாக அமைய
வேண்டும். அது தோன்றிய காலத்தில் நிலவியிருந்த சமூக
அநீதிகளைக் கண்டித்து எதி்்ர் நீச்சல் அடிக்கும் துணிவு
காப்பியப்படைப்பாளிக்கு வேண்டும். அத்தகு காப்பியங்களே
சமூகத்தில் நின்று நிலவும். சாதி-ே்பதங்களும், பொருளாதார
ஏற்றத்தாழ்வுகளும், ஆண்டான் - அடிமைச் சமூக அமைப்பும்
நிலவியிருந்த காலம் சேக்கிழார் காலம். இயன்ற வரை
சமயமரபுகளுக்கு மாறுபடாமல் சமூகத்தை நெறிப்படுத்த அவர்
அரிய முயற்சி மேற்கொண்டிருந்தமையை உணர முடிகிறது.

முடியாட்சிக்காலத்தில் - மன்னனின் நியாயமற்ற அழைப்பை
ஏற்க மறுத்து - ‘நாமார்க்கும் குடியல்லோம்’ (அப்பர்) என்று
வீறு கொள்ளும் உரிமை முழக்கம் அங்கே கேட்கிறது.

ஆட்சியில் தவறு நிகழுமானால் - அடியார்க்குத் தீங்கு
நேருமானால் - அரசனின் பட்டத்து யானையையும்,
பாகனையும் கொல்ல முடியும் என்பதை எறிபத்தர் வீரத்தில்
காண முடிகிறது.

காந்தியடிகளுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே உண்ணா
நோன்பையும், தனி மனித சத்யாகிரகத்தையும் நாவரசர் மேற்
கொண்டமை தெரிகிறது.

கோயில் பூசை செய்யும் சிவாசாரிய மரபில் வந்த சுந்தரமூர்த்தி
சுவாமிகள், கணிகையர் குலத்தில் வந்த பரவையாரையும்
வேளாளார் குலத்தில் பிறந்த சங்கிலியாரையும் கலப்பு மணம்
புரிகிறார். இறைவனும் இதற்குத் துணை நிற்கிறான்.

நந்தனார் வரலாறு அக்காலத்தில் ஆதி திராவிடர்கள்
சிவாலயங்களுக்குள் சென்று வழிபடத் தடை இருந்தமையை
எடுத்துக் காட்டுகிறது. ஆனால் திருஞானசம்பந்தராகிய வேதியர்,
தம் தேவாரப் பனுவல்களுக்கு இசைகூட்டி யாழ் ஒலி எழுப்ப,
திருநீல கண்ட யாழ்ப்பாணர் என்ற கீழ்க் குடியில் வந்த
அன்பரைத் திருக்கோயில் கருவறை வரை அழைத்துச்
செல்கிறார். திருநீல நக்கர் தம் இல்லத்தில் வேள்வி
மண்டபத்தில் கணவன் மனைவியாகப் பாணர் தம்பதியர் இரவில்
படுத்து உறங்க அனுமதிக்கிறார். வணிகர் மரபில் வந்த சிவநேசர்
தம் மகள் பூம்பாவையை வேதியர் குலத்து வந்த திருஞான
சம்பந்தருக்கு மணம் முடிக்க விரும்பியிருந்தார் என்று
தெரிகிறது. பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில்,
உலகத்தார் பார்வையில் வாழ்வை இழந்தவராகத் தோற்றம் தந்த
திலகவதியார், திருநீறு வழங்கித் தம்பியாரை மதமாற்றம் செய்து
சைவத்திற்கு மீட்டுள்ளார். ஒரு மடாதிபதிக்கு உரிய உரிமை ஒரு
பெண்ணுக்குச் சேக்கிழாரால் வழங்கப்படுகிறது.

4.7.1 ஆட்சியாளர் திறம்

நாடாளும் மன்னர்கள் நெறி திறம்பாது ஆள வேண்டும் என்பது
முதலமைச்சராக     இருந்த     சேக்கிழார்     விருப்பமாக
அமைந்திருக்கிறது.

மனு நீதிச் சோழன் வரலாறு நாடாள்வோருக்கு
மனு நீதியினும் மேம்பட்ட நீதி வழங்கப்பட
வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. பசுவின்
கன்று தேர்க்காலில் அடிபட்டு இறந்தமைக்குப்
பிராயச்சித்தம் போதும் என்று அமைச்சர்கள்
கூறினர். மன்னன் ஒப்பவில்லை. கன்றை இழந்த
பசுவின் துயரை, நான் என் மகனை இழந்து
நின்று பெறுவதே அரச நீதி என்று
மனுச்சோழன் கருதி, மகனைத் தேர்க்காலில்
கிடத்தித் தேர் ஊர்ந்து நீதி செய்கிறான்.

கல்தேர்
தம் பட்டத்து யானை இழைத்த தவறுக்காக அதனைக்
கொன்றது போதாது, யானைக்கு உரியவனாகிய என்னையும்
கொல்ல வேண்டும் என்று கூறிய புகழ்ச்சோழன் கற்பார்
நெஞ்சில் இடம் பிடிக்கிறான். முடியாட்சிக்காலத்திலேயே
இத்தகைய அரசர் வரலாறுகளைச் சேக்கிழாரால் மட்டுமே பாட
முடிந்திருக்கிறது.
தனித்தனி     அடியவர்     வரலாறுகளை ஒரு
பெருங்காப்பியமாக உருவாக்கியிருக்கும் நூலாசிரியர்
சேக்கிழாரின் படைப்பாற்றலைச் சுட்டிக் காட்டலாம்.
உணர்வுக்கு மட்டுமே வரும் என்று கருதப்பட்டிருந்த
பக்தி அனுபவத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து
படிப்பவர்களுக்கு     அவ்வனுபவத்தைக் கிடைக்கச்
செய்யும்     பெரியபுராணத்தின்     பெருஞ்சிறப்பினை
இனங்கண்டு போற்றலாம்.
இறைவனுக்கு     நிகராக, அவன்     அருள்பெற்ற
அடியார்களையும் ஒளியூட்டும் போதே ஒரு சமயம்
புதிய மறுமலர்ச்சி அடையும் என்ற உண்மையை
அடையாளம் காணலாம்.
பெரியபுராணம் ஏறத்தாழ ஓர் ஐந்நூறு ஆண்டுக்கால
வரலாற்றுக்கு ஒளியூட்டும் - வரலாற்றுக் கருவூலம்
என அதன் சிறப்பினைப் பகுத்துக் காணலாம்.
தமிழர் வாழ்வியல், பண்பாடு, தனி மனிதப் பண்புகள்,
பிறர்க்குத் தொண்டு செய்து மகிழ்தல் முதலிய
பண்பாட்டுப் பதிவுகளைத் தொகுத்துக் காணலாம்.
பெண்மை     பெரியபுராணத்தில்     பெற்றிருக்கும்
சிறப்பிடத்தையும்,     சைவத்தில்     பெண்களுக்கு
வழங்கப்பட்டிருந்த உரிமைகளையும் அடையாளங்கண்டு
பட்டியலிடலாம்.
தமிழ்ச்     சைவ     வரலாற்றில்     பெரியபுராணம்
ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை இனங் காணலாம்.
4.1. நூலாசிரியர் - சேக்கிழார்

பெரிய புராண நூலாசிரியர் சேக்கிழார். தொண்டை நாட்டில்
குன்றத்தூரில் பிறந்தவர். இவர் வளோளர் குலத்தில் ‘சேக்கிழார்’
என்ற குடியில் வந்தவர். இயற் பெயர் அருண்மொழித் தேவர்.
இவர் அநபாயன், அபயன், திருநீற்றுச் சோழன் முதலிய பட்டப்
பெயர்களை உடைய இரண்டாம் குலோத்துங்க சோழன்
அவையில் முதல் அமைச்சராகத் திகழ்ந்தவர். சோழன்
இவருக்கு ‘உத்தம சோழப்பல்லவன்’ என்ற பட்டம் அளித்துச்
சிறப்பித்தான். அக்காலத்தில் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக
சிந்தாமணி 
என்ற சமண நூலில் சோழன் பெரிதும் ஈடுபாடு
கொண்டிருந்தான். மன்னனைச் சைவ நாட்டம் உடையவனாக
மாற்றச் சிவன் அடியார் வரலாறுகளைச் சேக்கிழார் பெரிய
புராணமாக இயற்றினார்.

4.1.1 தொண்டர் சீர்பரவுவார்
சேக்கிழார் சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்றுத்
தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானை வணங்கி நின்றார்.
தில்லை அம்பலவன் ‘உலகெலாம் என்று சேக்கிழாருக்கு அடி
எடுத்துக் கொடுத்தான். அதனையே முதலாகக் கொண்டு,
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

என்ற     வாழ்த்தை முதலாக அமைத்துக் கொண்டு
‘திருத்தொண்டர்     புராணத்’தை இயற்றினார். சோழன்
முன்னிலையில்     இந்நூல் தில்லையில் அரங்கேற்றம்
செய்யப்பட்டது. நிறைவில் சோழன் சேக்கிழாரையும், பெரிய
புராணத்தையும் யானை மீது ஏற்றி, தானும் பின் இருந்து கவரி
வீசி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று
பெருமை சேர்த்தான். ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற
பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தான். பின்னர் சேக்கிழார்
தில்லையிலேயே தவம் செய்து வந்தார். இவர் காலம் கி.பி. 12
ஆம் நூற்றாண்டு என்பர்.

4.1.2 சேக்கிழார் புராணம்

சேக்கிழார் வரலாற்றையும், பெரியபுராணத் தோற்றத்தையும்
விரித்துரைக்கும் செய்யுள் நூல் ஒன்று தமிழில் உள்ளது.
இந்நூலுக்குச் ‘சேக்கிழார் புராணம்’ என்று பெயர். இதனை,
‘திருத்தொண்டர் புராண வரலாறு’ என்றும் கூறுவர். இதனைத்
தில்லை உமாபதி சிவாசாரியர் என்பவர் இயற்றியதாகக் கூறுவர்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமது சேக்கிழார்ப்
பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்
பாடிய கவி வலவ

என்று சேக்கிழாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்
.
4.2 பெரியபுராணம்
 பெருங் காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாகப்
பெரியபுராணம் இயற்றப்பட்டுள்ளது. பெரியபுராணத்தின் முதல்
நூல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை
என்பது முன்னரும் கூறப்பட்டது. எனவே, சிவனடியார்
வரலாறுகளைத் தொகுத்துத் தந்த சுந்தமூர்த்தி சுவாமிகளையே
காப்பியத்     தலைவராகச்     சேக்கிழார் கொண்டுள்ளார்.
காப்பியத்தின் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடத்தும்
சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாற்றை விரித்துரைத்து,
இடையிடையே அவரால் போற்றி வணங்கப்பட்ட அடியவர்கள்
வரலாறுகளையும் விளக்கி உரைத்து, மிக நுட்பமாக
இப்பெருங்காப்பியத்தைச் சேக்கிழார் படைத்தளித்துள்ளார்.
காப்பியக் கதை கயிலாயத்தில் தொடங்கி மீண்டும்
கயிலாயத்தில் கொண்டு போய் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இவ் அமைப்பு சேக்கிழாரின் காப்பியப் புனைவிற்குச் சான்று
கூறி நிற்கிறது.


4.2.1 காப்பியப் பகுப்பு 
 பெரியபுராணம்     காப்பிய     இலக்கணங்களுக்கு ஏற்ப
முதற்காண்டம், இரண்டாம் காண்டம் என இரண்டாகப்
பகுக்கப்பட்டுள்ளது. நூலின் உட்பிரிவைச்¢ சேக்கிழார் ‘சருக்கம்’
என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். முதல் காண்டத்தில் 5
சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் 8 சருக்கங்களும்
இடம் பெற்றுள்ளன. திருத்தொண்டத் தொகையில் இடம்
பெற்றுள்ள 11 பாடல்களின் தொடக்கமே சருக்கங்களுக்குப்
பெயராகச் சூட்டப்பட்டுள்ளன. உதாரணமாகத் திருத்தொண்டத்
தொகையின் முதற்பாடல் ‘தில்லைவாழ் அந்தணர் தம்
அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கியுள்ளதால்,
அப்பாடலில் இடம் பெற்றுள்ள அடியார் வரலாறுகளை
விரித்துரைக்கும் பகுதிக்குத் ‘தில்லை வாழ் அந்தணர் சருக்கம்’
என்றே ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். முதல் சருக்கமாகக்
கயிலாய மலைச் சிறப்புரைக்கும் ‘திருமலைச் சருக்கத்'தையும்
இறுதியாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம்
சென்றடைந்த     செய்திகளைக் கூறும் ‘வௌ¢ளானைச்
சருக்க’த்தையும் அமைத்துக் கொண்டார்.


4.2.2 யாப்பமைதி 

சேக்கிழாரின் பெரியபுராணம் முழுவதும் அக்காலத்தில்
பெருவழக்கில் இருந்த யாப்பு முறைகளையே பின்பற்றி
அமைக்கப்பட்டுள்ளது. கீழ் வரும் பட்டியல் யாப்பமைதியைக்
எடுத்துரைக்கும்.

 
வ.எ
யாப்பு வகை
பாடல்
தொகை
1.
2.
3.
4.
5.
6.
7.
 
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
எண்சீரக்¢கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
தரவு /கொச்சகக் கலிப்பா
கலி நிலைத் துறை
கலி விருத்தம்
வஞ்சி விருத்தம்
1805
75
280
1207
545
368
6
 கூடுதல் பாடல்கள்
4286

4.2.3 திருமலைச் சருக்கம்

 
பெரியபுராணத்தின் முதற் பகுதியாகிய திருமலைச் சருக்கம்

 
1. பாயிரம்
2. திருமலைச் சிறப்பு
3. திருநாட்டுச் சிறப்பு
4. திருநகரச் சிறப்பு
5. திருக்கூட்டச் சிறப்பு
6. தடுத்தாட் கொண்டபுராணம்

கயிலாய மலை

என்ற ஆறு உட்பகுதிகளையும், 344 பாடல்களையும் கொண்டு
நடையிடுகிறது. காப்புப்பகுதியில் முதல் இரண்டு பாடல்கள்
தில்லைக் கூத்தனையும், மூன்றாவது பாடல் விநாயகனையும்
வணங்குவதாக அமைந்துள்ளது.

 
இங்கிதன் நாமம் கூறின்
இவ்வுலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள்
சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப்
புறஇருள் போக்குகின்ற
செங்கதிரவன் போல் நீக்கும்
திருத்தொண்டர் புராணம் என்பாம்
(பெரியபுராணம் - 10)

(நாமம்-பெயர், கதிரவன்-சூரியன்) என்னும் பாடல் இந்நூல்
பெயரைப் பதிவு செய்கிறது.

4.2.4 பெரியபுராணம் - பெயா¢க்காரணம்

காப்புப் பகுதியில் விநாயகர் வாழ்த்தில் ‘எடுக்கும் மாக்கதை’
என்ற ஒரு தொடர் வருகிறது. மா-என்ற ஓரெழுத்து ஒரு
மொழிக்குப் பெரிய என்பது பொருள். எனவே, மாக்கதை
என்ற தொடருக்குப் பெருங்கதை என்று பொருள்
கொண்டிருக்கலாம். முன்னரே தமிழில் பெருங்கதை என்ற ஒரு
நூல் இருப்பதால், இதனை வேறுபடுத்தி அறிவதற்குப்
பெரியபுராணம்     என்று     இந்நூலை     முன்னோர்
அழைத்திருக்கலாம்.     அவையடக்கத்தில்     ‘அளவிலாத
பெருமையராகிய அளவிலா அடியார்’ என்ற ஒரு தொடர்
வருகிறது. ‘பெருமையர்’ என்ற சொல் பெருமை மிக்கவர்,
பெரியார் என அழைக்கப்பட்டு, பெருமை மிக்க அடியார்
வரலாறு என்ற பொருளில் பெரியபுராணம் என்றும்
அழைக்கப்பட்டிருக்கலாம். செயற்கரிய செயல் செய்தவர்களைத்
திருவள்ளுவர் ‘பெரியார்’ என்கிறார். நாயன்மார் வரலாற்றில்
பலரும் செயற்கரிய செயல் செய்தவரே ஆவா¢. சேக்கிழாரும்
பல இடங்களில் அடியா£¢ செயல்களைச் செயற்கரிய செயல்
என்று குறிப்பிட்டுள்ளார். அதுபற்றியும் பெரியபுராணம் என்ற
பெயர் அமைந்திருக்கலாம்.

4.2.5 திருமலைச் சிறப்பு 

திருமலைச் சிறப்பில், கயிலாய மலையின் இயற்கை எழிலும்,
சிவ பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவோலக்கமும்
(அமா¢ந்திருக்கும் நிலை) சிறப்பிக்கப்பட்டுள்ளன. உபமன்யு
முனிவர் சீடர்களுக்குச் சுந்தரர் வரலாறு உரைக்கும் போக்கில்
காப்பியமும் இங்கேயே தொடங்கி விடுகிறது. காப்பிய நாயகர்
பெருமையை,

 
 
தம்பிரானைத் தன் உள்ளம் தழீ இயவன்
நம்பி யாரூரன் நாம் தொழும் தன்மையன்
(29)

என்று உபமன்யு முனிவர் கூற்றாகச் சேக்கிழார் பதிவு
செய்கிறார். கயிலையில் சுந்தரா¢ காதல் வயப்பட, சிவபெருமான்
அவரை நிலவுலகிற்குச் செல்லுமாறு பணித்தா£¢. இதனால் தென்
தமிழ்நாடு அடியவர் பெருமை அறிந்து மகிழும் பேறு பெற்றது
என்கிறார் சேக்கிழார். இதனை அவா¢,

 
 மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்
போதுவான் அவர் மேல் மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்
(35)

எனக் காப்பிய நுட்பமும், நயமும் தோன்றக் குறித்துக்
காட்டுகிறார்.

4.2.6 திருக்கூட்டச் சிறப்பு

முதற் சருக்கத்தில் இடம் பெற்றுள்ள திருக்கூட்டச்சிறப்பில்
சைவ     அடியார்களின்     அளவற்ற     பெருமைகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.     சைவ     அடியார்கள்
புறத்தூய்மையும், அகத் தூய்மையும் மிக்கவர்கள் என்பதை,

 பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
(141)

என்றும், அன்னார் இன்ப துன்பங்களால் பாதிப்பு அடையாமல்,
பொன் பொருள்களில் நாட்டம் இல்லாதவர்கள் என்பதனை


 
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
(143)

(ஆக்கம¢ = செல்வம் ; ஒக்கவே = ஒன்றாகவே, விறலின் = பெருமையின்) என்றும், அடியவா¢ தம் அகம் மற்றும் புறத்தூய்மைகளை,


 ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலா¢
ஈர அன்பினா¢ யாதுங் குறைவிலா¢
வீரம் என்னால் விளம்பும் தகையதோ¢
(144)

என்றும் சேக்கிழா£¢ இனங்காட்டிப் பெருமை சோ¢க்கிறா£¢.

(ஆரம¢ = கழுத்தில் அணியும் அணிகலன், கண்டிகை = உருத்திராக்கம்,பாரம் = சுமை, இங்கே கடமை)
4.3 தடுத்தாட் கொண்ட புராணம்
முதற் படலத்தின் ஆறாவது பகுதி தடுத்தாட்
கொண்ட புராணம். பெரிய புராணத்தின் மிக
உன்னதமான பகுதி இது என்று கூறலாம்.
சுந்தரமூர்த்தி     சுவாமிகளின் அவதாரம்.
திருவெண்ணெய் நல்லூர் அரசன் நரசிங்க
முனையரையன் சுந்தரரை அரண்மனையில்
அன்பு பாராட்டி வளர்த்தமை, புத்தூர் சடங்கவி


சிவாசாரியார் மகளை மணம் பேசியமை, திருமணத்தில்
சிவபெருமான் முதிய வேதியராய் எழுந்தருளி, ஓலை காட்டித்,
திருமணத்தைத் தவிர்த்துச் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்டமை,
திருவெண்ணெய் நல்லூர் சிவாலயமாகிய திருவருட்துறையில்
சிவபெருமான் மறைந்து தம்மைப் பாடுமாறு பணித்தமை,
எவ்வாறு பாடுவது என்று சுந்தரர் திகைத்து நின்ற போது ’பித்தா’
என்று அடி எடுத்துக் கொடுத்துச் சிவ பெருமான் பாடுமாறு
செய்தமை என்றெல்லாம் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

................அன்பில்
பெருகிய சிறப்பில் மிக்க
அர்ச்சனை பாட்டேயாகும்
ஆதலால் மண்மேல் நம்மைச்
சொல்தமிழ் பாடுக என்றார்
தூமறை பாடும்வாயார்
216

(தூமறை = தூய்மைமிக்க வேதங்கள்)

என்ற அழகிய, தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் இறைமை
சார்ந்த மொழிகளும்,
முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை
ஆதலாலே என் பெயர் ‘பித்தன்’ என்றே பாடுவாய்
219

என்ற திருவருட் குறிப்பு மொழிகளும் இப்பகுதியில் இடம்
பெற்றுள்ளன.

4.3.1 பரவையார் திருமணம்

மேலும் தலயாத்திரை மேற்கொண்ட சுந்தரர் திருத்துறையூரில்
தவநெறி அருளப் பெற்றதும், திருவதிகை எல்லைப் பகுதியில்
சிவன் திருவடி சூட்டப் பெற்றதும், தில்லைச் சிற்றம்பலவனை
வணங்கிப்     பேரின்ப     வெள்ளத்துள்     திளைத்ததும்,
தோணிபுரத்தில் (சீகாழி) இறைவன் திருக்காட்சி காட்டக் கண்டு
மகிழ்ந்ததும், திருவாரூரில் இறைவன் தம்மைச் சுந்தரருக்குத்
தோழமையாகத் தந்ததும், சுந்தரர் 'தம்பிரான் தோழர்’ என
அழைக்கப்பெற்றதும், இறைவன் கட்டளைப் படி திருவாரூரில்
உருத்திர கணிகையர் குலத்தில் பிறந்திருந்த பரவையாரைக்
கண்டு ஆரூர்ப் பெருமான் அருள் துணையோடு அவரை
மணந்து     மகிழ்ந்ததும்     இப்பகுதியில்     நிரல்பட
விரித்துரைக்கப்பட்டுள்ளன.

4.3.2 திருத்தொண்டத் தொகை

திருவாரூரில் வாழ்ந்து வரும் நாளில் திருக்கோயில்
முன்பகுதியில் அமைந்திருந்த தேவாசிரியன் மண்டபத்தில்
சிவன் அடியார் பலர் கூடியிருக்கக் கண்ட சுந்தரர், தாம்
அன்னாருக்கு அடிமை பூண வேண்டும் என்று விரும்பினார்.
திருவாரூர் இறைவன் சிவன் அடியார்களின் பெருமைகளை
அசரீரியாக எடுத்துரைத்தான்.
பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரை- நீ அடைவாய்
(342)
என்று அடியவர் பெருமையை இறைவன் எடுத்துக் கூறக்
கேட்ட சுந்தரர் மகிழ்ந்தார். இறைவன் அடியார் பெருமைகளை
விரித்து நீ பாடுக என்று ஆணையிட்டு, ‘தில்லை வாழ்
அந்தணர்’ என்று அடி எடுத்தும் கொடுத்து அருளினார்.
சுந்தரர் சிவன் அருள் கட்டளையை ஏற்று 11 பாடல்களால்
அடியவர் பெருமை கூறும் - வரலாற்றுச் சிறப்புமிக்க
திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தைப் பாடி வழங்கினார்.
அதில் முன் குறித்தவாறு 60 தனியடியார்கள் மற்றும் 9
தொகையடியார்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அவ்வடியார் வரலாற்றை இனி நான் விரித்துரைப்பேன் என்று
கூறிச் சேக்கிழார் நாயன்மார் வரலாறுகளை இரண்டாவது
சருக்கம் முதலாக விரித்துரைத்துள்ளார்

4.3.3 திருத்தொண்டத்தொகை - அமைப்பு

திருத்தொண்டத் தொகையில் ஆண் அடியார்கள் 58 பேரும்,
பெண் அடியார்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். சேக்கிழார்
காப்பிய நாயகராகிய சுந்தரர், அவர் தந்தை சடையனார், தாயார்
இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து நாயன்மார்
தொகையை 63 ஆக உயர்த்தியுள்ளார். பெண் அடியவர்கள்
மூவருள் இசை ஞானியார் வரலாறுடன் இணைந்து வந்து
விடுகிறது. மங்கையர்க்கரசியார் வரலாறு திருஞான சம்பந்தர்
வரலாற்றுள் விரித்துரைக்கப்பட்டு விடுகிறது. எனவே,
இவ்விருவர் வரலாறுகளும் தனியே மிகச் சுருக்கமாகவே பாடி
அமைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார் வரலாறு
ஒன்று மட்டுமே விரித்துரைக்கப்பட்டுள்ளது. திருத்தொண்டத்
தொகையில் இடம் பெறாது அடியவர்கள் அருள் வரலாற்றில்
இடம் பெற்றுள்ள திலகவதியார், திருவெண்காட்டு நங்கை,
கமலவதி முதலாகிய பல பெண்களும் இந்நூலுள் பெரிதும்
போற்றப் பட்டுள்ளனர்.
பெரிய புராணத்துள் இடம் பெற்றுள்ள
மதிப்பு மிக்க பெண்களைச் சேக்கிழார்
‘அவள்’ ‘வந்தாள்’ என்ற பெண் பால்
விகுதிகளை விடுத்து, ‘அவர்’ ‘வந்தார்’
என்ற     பலர்பால்     விகுதிகளால்
போற்றியிருப்பது     குறிப்பிடத்தக்க
சிறப்பாகும்.

பெண் அடியார்கள்
4.3.4 தொகை அடியார்களும் தனி அடியார்களும்

ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத்
தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் என்பர். இவர்
இன்னார்     என்று     குறிப்பிட்டுச் சொல்ல இயலாத
வேறுபலரையும், தம் காலத்துக்கு முன்பும், பின்பும்
வாழ்ந்தவர்களையும்,     வரவிருப்பவர்களையும்     போற்றும்
நோக்கில்     தொகையடியார்     வணக்கத்தைச் சுந்தரர்
மேற்கொண்டுள்ளார்.     வரலாற்று     எல்லைக்குள்
உட்படாதவர்களையும், சிறப்பிக்கும் சுந்தரரின் இப்பண்பு
பெருஞ்சிறப்புக்கு     உரியது.     நால்வரில் ஒருவராகிய
மாணிக்கவாசகர் பெயர் - திருத்தொண்டத் தொகையில் இடம்
பெற வில்லை. காரணம் அவர் சுந்தரர் காலத்துக்குப் பின்
வந்தவராதல் வேண்டும். இவ்வாறான தொகையடியார்களை ஒரு
அட்டவணையின் வாயிலாக அறிந்து கொள்வது பயனுடையதாக
அமையும்.
வ.எண்தொகை அடியார்பாடல்கள்
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
தில்லைவாழ் அந்தணர்
பொய்யடிமை இல்லாத புலவர்
பத்தராய்ப் பணிவார்கள்
பரமனையே பாடுவார்
சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்
திருவாரூர்ப் பிறந்தார்
முப்போதும் திருமேனி தீண்டுவார்
முழு நீறு பூசிய முனிவர்
அப்பாலும் அடிச்சார்ந்தார்
10
3
8
2
1
2
3
6
2

பெரியபுராணப்     பெண் அடியார்கள் மற்றும் தொகை
அடியார்கள் அறிமுகத்திற்குப் பின்னர் ஆண் அடியவர்கள்
வரலாறுகளைக்     காணலாம்.     இரண்டாவது சருக்கம்
தொடங்கிப்பின் வரும் சருக்கங்களில் 60 ஆண் அடியார்களின்
வரலாறுகளும், திருத்தொண்டத் தொகை வரிசையில்
விரித்துரைக்கப் பட்டுள்ளன,

4.3.5 நாயன்மார் - குலமரபு

திருஞானசம்பந்தர் அருள் வரலாறே இந்நூலுள் அதிகப்
பாடல்களால் விரித்துரைக்கப்பட்டுள்ளது. 4287 பாடல்களில்
திருஞானசம்பந்தர் புராணம் மட்டும் 1256 பாடல்களால்
பாடப்பெற்றுள்ளது, திருநாவுக்கரசர் வரலாறு 429 பாடல்களால்
நடையிடுகிறது. ஏனைய வரலாறுகள் கிடைத்திருக்கும்
செய்திகளின் அளவிற்கு ஏற்ப விரித்தும் - சுருக்கியும் பாடப்
பெற்றுள்ளன. நாயன்மார்கள் அக்காலத்தில் நிலவிய பல்வேறு
குலங்களையும், சாதிகளையும் சார்ந்தவர்கள். சைவம் என்ற
ஒரு பெரிய வட்டத்துள் சாதி வேறுபாடுகள் கருதாது மனித
குலத்தை ஒருங்கிணைக்கும் அரிய முயற்சி பெரிய புராணத்துள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடியவர்களுள் வளோளர் 13,
அந்தணர் 12, முடியரசர் 6, மரபு இன்னது என்று தெரியாதவர்
6, குறுநில மன்னர் 5, வணிகர் 5, ஆதிசைவர் 4, இடையர் 2,
ஏனைய குலத்தோர் 10. இவர்கள் சோழ நாடு, நடுநாடு,
தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலைநாடு, கோனாடு, மழநாடு
என்ற பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இன்ன நாட்டினர்
என்ற குறிப்பு 9 அடியவர் வரலாறுகளில் இல்லை.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
சோழ மன்னன் சேக்கிழார் காலத்தில் விரும்பிப்
படித்த காப்பியம் எது?
விடை
2.
சேக்கிழாருக்கு வழங்கப்பட்ட இரண்டு பட்டப்
பெயர்களை விளக்குக,
விடை
3.
திருத்தொண்டத் தொகையுள் குறிக்கப்பட்டிருக்கும்
ஆண் அடியார்,பெண் அடியார் எண்ணிக்கையைக்
குறிப்பிடவும்.
விடை
4.
தொகை அடியார்களில் இரு குழுவினர் பெயரை
எடுத்துக்காட்டவும்,
விடை
4.8 தொகுப்புரை

பெரியபுராணம்     பன்னிரு     திருமுறைகளுள் ஒன்றாக
அமைக்கப்பட்டிருந்த போதும், அது தனி்த்தன்மை உடையது
என்பது இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டது. இறைவனுக்கு
இணையாக இறையருள் பெற்று மனித குலத்திற்குத் தொண்டு
செய்யும் மனிதர்களும் போற்றவும் வணங்கவும் பட வேண்டும்
என்பதைப் பெரியபுராணம் வற்புறுத்துகிறது. சாதிகளால்
பிரிவுண்டு பிளவுபட்டு நின்ற மனித குலத்தை, ஒரு சமயத்தை
மையப்படுத்தி ஒன்று படுத்த இயலும் என்பதைப்
பெரியபுராணம் காட்டுகிறது. முடியாட்சிக்கு எதிரான தனிமனித
உரிமைப் போராட்டத்திற்கும் இங்கே கால்கோள் விழா
நடத்தப்பட்டுள்ளது. பெண்மைக்குப் பெருமை சேர்க்கும்
உள்ளார்ந்த முயற்சியில் சேக்கிழார் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்கள், தெய்வங்களோடு
திருக்கோயிலுக்குள் திருவுருவமாக எழுந்தருளிப் பெருமை
பெற இயலும் என்பதை இந்நூல் துணிவுடன் பறைசாற்றுகிறது.
தமிழர் வாழ்வில் இந்நூல் ஏற்படுத்தியிருக்கும் பெரும்தாக்கம்
நீள நினைந்து போற்றப்பட வேண்டியது.


பயில்முறைப்பயிற்சி

  1. சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்திருந்த
    பெரியபுராண நாயன்மார்கள் யார் யார் என்பதைச்
    சிந்திக்கவும்.
  2. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றோடு தொடர்புடைய
    இடங்களை நினைவு கூரவும்.
  3. சிவன் அடியார்களின் இலக்கணங்களாகப் பெரியபுராணம்
    கூறும் செய்திகளை ஒரு பட்டியலாகத் தயாரிக்கவும்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பெரியபுராணத்தில் விரித்துரைக்கப்படும் திருநான
சம்பந்தர் வரலாற்றின் பாடல் தொகை எத்தனை்?
2.
பெரியபுராணத்தில் வரும் கழறிற்றறிவார், திருநாளைப்
போவார் என்பாரின் வழக்குப் பெயர்களைத் தருக.
3.
சிவலிங்கம் இறை நிலையில் எவ்வகையைச் சார்ந்தது?
4.
சேக்கிழார் குறிக்கும் சிவன் அருட் செயல்கள் குறித்த
இரு தொடர்களை எழுதுக.
5.
பெரியபுராண வரலாற்றுப் பதிவுகளில் இரண்டினைக்
குறிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக